Monday, 12 November 2018

விச்சு டாக்டர்

"தைரியமாக ஒரு Fanta வாங்கி சாப்பிடு. ஜுரம் இருப்பதை பற்றிய கவலை வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன்"

1970 களில் Fanta என்ற பானம் தடை செய்யப்பட்டு மீண்டும் 90 களில் திரும்பி நுழைந்த இடைபட்ட காலத்தில் "Gold spot".  பானத்தின் பெயர் மாறுமேயன்றி,  கொடுக்கப்பட்ட தைரியத்தில் எள்ளளவும் மாற்றமில்லை.  பானம் வேண்டாம் என்றால் ஒரு ஆரஞ்சு குச்சி ஐஸ்....

இரண்டு தலைமுறைகளை தாண்டி "நான் பார்த்துக் கொள்கிறேன்" என்ற வாக்கு, ஒரு தெய்வ வாக்காகவே எங்களுக்கு தைரியத்தை தந்தது.

சொல்லத் தெரியாத குழந்தைகளாக இருந்த வயதில் என் மகள் ஒரு 50 மி.லி ஜலதோஷத்திற்கான மருந்தை மொத்தமாக அருந்தி அரை மயக்கமானபோதும், என் மகன் கொசுவர்த்தி மருந்து Good Nightயை உடைத்து அதை வாயில் வைத்திருப்பானோ என்ற ஐயம் ஏற்பட்டபோதும், அவரின் தைரியமூட்டும் அணுகுமுறையே தனித்துவமானது.

சாதாரண ஜுரம்,  ஜலதோஷத்திற்கு கூட அவரிடம் காண்பித்தால் மட்டுமே எங்களுக்கு மன அமைதி ஏற்படும். அங்கு எவ்வளவு கூட்டம் இருப்பினும்...

நான் பிறந்தது முதல் இன்று வரை குழந்தைகள் உடல்நலம் எனில் அவரை தவிர வேறு ஒருவரிடமும் செல்லாத போக்கையே கடைபிடுத்து வந்துள்ளோம்.

Dr J Viswanath என்கிற குழந்தை நல மருத்துவரை (அல்ல நிபுணரை) "விச்சு" என்று மிக உரிமையோடு அழைக்கும் பேறு பெற்ற குடும்பம் எங்களுடையது. அவரின் இளமைப் பருவம் முதல் 45 ஆண்டுகளுக்கு மேலாக பக்கத்து வீட்டாராகவும், கடந்த 32 ஆண்டுகளாக ஒரு மருத்துவராகவும், அவரின் குழந்தை வளர்ப்பிற்கான நூலை பதிப்பிக்கும் உரிமை வழங்கியவராகவும், நல்ல மனிதராகவும், மிக அருமையான குடும்ப நண்பராகவும் விளங்கியவர்.

அவரிடம் Appointment பெற காலை 5 மணிக்கு தொலைபேசியில் என் தந்தை அழைக்கும் போதும், பகல் பொழுதில் சந்திக்கும் போதும், சில மாலை நேரங்களில் சந்தேகங்கள் கேட்பதற்கு அழைக்கும் பொழுதும் ஒரே மாதிரியான உற்சாகம் நாள் முழுவதும் ஒருவருக்கு இருப்பது பல நேரங்களில் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

அவரின் இளமைக் கால நினைவுகளில் எங்கள் இல்லத்திற்கு வந்து அவர் விரும்பி உண்ட ஐயங்கார் வீட்டு புளியோதரையும், மோர் குழம்பும், எங்கள் வீட்டு பெரியோர்கள் மகிழ்ச்சியோடு நினைவுகூறுவதை என் வாழ்நாளில் பலமுறை கூறகேட்டிருக்கிறேன்.

என் குழந்தைகள் மட்டுமின்றி எங்கள் நண்பர்களின் குழந்தைகள் பல, சாதாரண நிலை முதல் மிக அவசரமான நிலை வரை, எங்கள் மூலம் அவரிடம் சென்று காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பதில் எங்களுக்கு ஒரு பெருமிதமே.

அவர் நினைவுத்திறன் மிக பிரம்மிப்பானது. ஒவ்வொரு குடும்பத்தையும் ஒரு பெயர் கொண்டு நினைவில் ஏற்றி, அந்த பெயர் கொண்டே அவர்களை உள்ளே வரவேற்கும் முறை அலாதியானது.

அவர் மகனும் நானும் சமகாலத்தில் வளர்ந்தவர்கள் என்பதால், அவரை பற்றிய செய்திகளை அவ்வப்போது பகிர்வார். 

கடைசியாக ஒரு மாதத்திற்கு முன் எங்கள் விட்டிற்கருகில் வர நேர்ந்தபோது, அவரின் உடல் நலக்குறைவின் காரணமாக எனது தந்தையை வெளியிலிருந்தே அழைத்து குசலம் விசாரித்து என் தந்தையுடனும், மனைவியுடனும் தன் கைபேசியில் சுயபடம் எடுத்து சென்றார்.

எங்கள் குடும்பத்தின் இனிவரும் தலைமுறையின் நலத்தினை பேணிக்காக்க அவரில்லை என்பதை ஏனோ என் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.

தொலைபேசியை எடுத்தவுடன் "Viswanath"எனும் அந்த உற்சாக குரலும்,"வாங்க சேச்சு" (என் தந்தை சேஷாத்திரியின் சுருக்குபெயர்) என்று வரவேற்க்கு குரலும் இனி வெறும் நினைவுகளே! !!!

Dr J Viswanath (எ) Dr JV (எ) விச்சு டாக்டர் ....ஒரு சகாப்தம்...!!! Ohm Shanthi

No comments:

Post a Comment