Thursday, 22 January 2026

அஞ்சலி

அஞ்சலி

முதலாம் சந்திப்பில்...
என்னைவிட்டுவிட்டு 
நீர்குவளையை கொண்டு சென்றவள்...

இரண்டாம் சந்திப்பில்
நீர்குவளையை விட்டுவிட்டு
என்னை கொண்டு சென்றாள்...

தாகத்தில் தண்ணீருக்கு தவிப்போம்
இன்று தண்ணீரே தவிக்கிறது
தன்னை விட்டதை எண்ணி

நீர்குவளை தன்னைதானே நொந்தது
தாகத்தை தாபம் வென்றதை அறியால்...!!!

Wednesday, 22 November 2023

திருச்சியும் திரையிசையும்

"ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போல ஆடுது, 
பொழுதாகி போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே உன்ன தேடுது...."

ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும் பொழுதும் பாடும் பொழுதும் 40 ஆண்டுகள் பின்னோக்கி சென்று திருச்சியை ஞாபகப்படுத்துகிறது... இளமை பருவத்தில் எனக்கேற்பட்ட ஏதேனும் காதல் விவகாரமாக இருக்குமோ என நீங்கள் உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுவது எனக்கு நன்றாக புரிகிறது...

திருச்சி தில்லை நகர் நான்காவது கிராசுக்கும் ஐந்தாவது கிராசுக்கும்  இடையே இருந்த ஒரு தேநீர் கடையே நியாபகம் வருகிறது.  திரை இசை மீது ஏற்பட்ட அபரிமிதமான ஆர்வம் என்னைப் போன்றவர்களுக்கு இளையராஜா வந்தபின்தான்.. அதற்கு பாலமாக இருந்தது அந்த தேநீர் கடை தான்...

எண்பதுகளில் நினைவு தெரிந்த பிறகு ஒருவர் பள்ளியிலோ கல்லூரியிலோ படித்துக் கொண்டிருந்தவராயின், பழைய நினைவுகளில் காதலை விட கண் முன்னே வந்து நிற்பது இளையராஜாவா தான் இருக்கும்...

"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி" என்பதற்கேற்ப அந்த தேநீர் கடையின் வாயிலில் காத்திருந்து காத்திருந்து இசைஞானி பாடல்களை கேட்ட ஒரு காலம் உண்டு...

முரளியையும் தெரியாது குயிலியையும் தெரியாது... ஆனால் "ஆத்தாடி பாவாட காத்தாட" மட்டும் தெரியும்...

கேப்டனை தெரியாது ஆனால் "சின்ன மணிக்குயிலே" மட்டும் தெரியும்...

"பொன்மானே சங்கீதம் பாடி வா "

"தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா"

"என்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே"

"சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது"

ஒவ்வொரு முறையும் ஒரு புது பாடல் ஒலிக்கும் போது ஒரு 10 அடி தள்ளி நின்று அந்தப் பாடலை க்ரஹித்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிடம் தாமதமாக வீட்டுக்கு திரும்பி வரும் பழக்கம் உண்டு...  தனிமைக்கு சிறந்த மருந்து இளையராஜாவின் பாடல்கள் என அன்றே எனக்குப் புரிய வைத்த காலமது...

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த திரையிசை பாடல்கள் கேட்பதும் என்னுடைய தொட்டில் பழக்கமாக தொடங்கியதுதான்... 

"கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ", 

"பூவரசம்பு பூத்தாச்சு பொண்ணுக்கு செய்தியும் வந்தாச்சு "

"சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையே"

போன்ற பாடல்களே எனக்கு ஒரு தாலாட்டு பாடலாக அமைந்த ஒரு காலமும் உண்டு...

ஆயினும் திருச்சி எனக்கு என்னுடைய விடலைப் பருவத்தில் திரையிசை மீதான காதலையும் அதற்கு காரணமாக இருந்த இளையராஜாவையும் பசுமரத்தாணி போல் பதிய வைத்தது.

இசைஞானி இசையைத் தவிர வேறு எந்த போதைக்கும் என்னை அடிமையாக்காமல் ஒரு நல்வழியில் பயணிக்க வைத்ததில் திருச்சி மாநகரத்துக்கு பெரும் பங்குண்டு.

சென்னைக்கும் திருச்சிக்கும் அந்த காலகட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த கண்ணன் & கண்ணன் வீடியோ பஸ்  "செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தணமே" வையும் "இதயம் ஒரு கோவில் அது உதயம் ஒரு பாடல் "யையும் "நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா " வையும் "ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே" வையும் என் காதில் ஒலிக்கச் செய்து என்னை பித்தனாக்கியது...

தனிமையை கையாள திருச்சி எனக்கு சொல்லிக் கொடுத்தது என்றால், தனிமையும் ஒரு சுகமே என எனக்கு புரிய வைத்தது இசைஞானியின் திரை இசை பாடல்கள்...  

திருச்சியில் இருந்த போது நான் கற்ற பல பாடங்கள், வேதனைகள், ஏற்பட்ட கோபங்கள், இயலாமையால் ஏற்பட்ட கசப்புகள்....இவை அனைத்திற்கும் இடையே ஒரு மகிழ்ச்சியும் உண்டு என்றால், அது மனதை வருடி மனிதனாக வைத்திருந்த இசைஞானி என்னும் மந்திரமும்,  அதனால் ஏற்பட்ட சுகமும், அந்தத் திரையிசையின் மீது ஏற்பட்ட ஈர்ப்பும் தான்.

திருச்சியில் எனக்கு எந்த காதலியும் இருந்ததில்லை என்றாலும், அந்த  திருச்சி மாநகரின் மீதே ஒரு தீரா காதல் இருப்பது, அந்த 15 வயதில் என்னை தன்மை மாற்றம் செய்து வாழ்வை புரிய வைத்ததும்,  எனக்கு திருச்சி 13 வயதில் அறிமுகப்படுத்திய இசைஞானியும் அவரின் இசை வருடல்களாலும்தான்...

"நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா"

நீ.....

நீ....
மூன்றில் குழந்தையாய்....
இருபதில் தோழியாய்...
முப்பதில் மௌனியாய்....
நாற்பதில் நறுமுகையாய்...

இனி
ஐம்பதையும் அறுபதையும்
ஆவலுடன் எதிர்நோக்கி நான்...

மீண்டும் மீண்டும் வா...!!!

அம்மா

என்....

நான்காம் வயதில்
மரத்தை சுற்றி ஓடிய கால்கள்
களைத்து உணவை நாடி வருகையில்
ஊட்டி வளர்த்து உள்ளம் மகிழ்ந்தாய்...

பதினான்காம் வயதில்
அறியாத ஊரில் அனாதையாய் எண்ணி
நாள்தோறும் நான் கலங்க
வாழ்வை நெறிபடுத்தினாய், வலிபாராமல்...

இருபத்திநான்கில்
இந்த இல்லத்தின் புதிய வரவானவளை
வாயாற வாழ்த்தி உளமாற வரவேற்று
உன் அன்பை பகிர்ந்தாய் பதட்டமில்லாமல்...

முப்பத்து நான்கில்
முத்து முத்தாய் இரண்டு மழலைகளை
முத்தாய்ப்பு செய்து உச்சி முகர்ந்தாய்
பசி தூக்கம் அறிந்து முகம்வாட விடாமல்....

நாற்பதை தொடும் முன்பே
நாதியற்று போனதுபோல்
உன் மரணம் என்னை பீதியேற்ற
உணர்ந்தேன் நீயில்லா வெறுமையை....

நான்காண்டுகள் உருண்டனவே
நாள்தோறும் உன் நினைவில்
எனையாட்கொண்ட வெறுமையை
வெல்லும் முயற்சி தோல்வியில்
வெற்றிடத்தை நிரப்பிவைக்க
அன்னையைப்போல் யாருளர்...!!!

இசைஞானி....

அரும்புகளாய் தவழ்ந்தபோது
அவ்வையின் ஆத்திச்சூடி
அரும்புமீசை காலத்தில்
உன் இசையே என் உயிர்நாடி

"உன்னோடு ஐவரானோம்"
என்றான் இராமன் தன் காலத்தில்..

நாங்களோ உன்னோடு
ஐவராக்கினோம்.... ஆம்..

மாதா..
பிதா..
குரு..
தெய்வம்...

ஐந்தாவதாக...இசைஞானி.....!!!!

பாலு....

“மச்சி ஒன்னால மட்டும்தான் இதல்லாம் முடியம்”
“வந்துட்டாண்டா ஆர்ட் டைரக்டர்... படம் வேற ரிலீஸ் ஆகிருக்கு”
இதல்லாம் நான் எண்பதுகளின் முடிவிலும் தொண்ணுறுகளிலும் கேட்ட ஏச்சுகளும் பேச்சுகளும்..... நான் செய்த ஒரே தவறு பாலுவின் பரம ரசிகனாக இருந்தது மட்டுமே...
கலாய்பது என்பது வார்த்தையாக அந்த காலங்களில் இல்லாவிடினும் வழக்கமாக என்றுமே இருந்திருகிறது. அதுவும் டீன்ஏஜ் பருவத்தில், உயர்நிலை மற்றும் கல்லூரி மாணவனாக இருக்கையில் கேட்கவே வேண்டாம்..
“மாங்குயிலே பூங்குயிலே” என்றும் “போவோமா ஊர்கோலம்” என்றும் பாடி திரிய வேண்டிய வயதில் பாலுவின் திரைப்படங்களை பார்ப்பது ஒரு தண்டனையாக கருதிய என் நண்பர்கள் மத்தியில் நான் ஒரு விசித்திர பிறவியாக பார்க்கப்பட்டேன்.. நாங்கள் அனைவரும் ஒன்றாக திரைப்படங்களை பார்ப்பது என்று ஒரு தர்மத்தை மட்டும் வைத்திருந்தோம். அவர்களை பாலுவின் திரைப்படங்களுக்கு இழுக்க எனக்கு உதவியது இசைஞானியின் இசை என்ற ஒரு தூண்டில் மட்டுமே..
இனி பாலு...
சில மரணங்கள் நமக்கு வெறும் செய்திதான். வேறு சில அனுதாபத்தை எற்படுதகூடியவை.  சில நம்மை கதறவைப்பவை.  அந்த வகையில் இவர் மறைவு என் கண்களை பனிக்கவைத்தது என்பதில் சந்தேகமில்லை.
“கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்” எங்கிருந்தோ இந்த வரிகள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த பாடல் அவர் இயக்கிய நீங்கள் கேட்டவை படத்திலிருந்து நான் எப்பொழுதும் கேட்பது, கேட்டுகொண்டிருப்பது..
அழியாத கோலங்கள் தன்னுடைய இரண்டாவது படைப்பாயினும் அதையே தன் சுயசரிதை என்று கூறிய ஒரு இயக்குனர்.. தன் வாழ்க்கை தொடங்கும்போதே சுயசரிதை எழுத தெரிந்தவர்...
ஒரு மனிதனின் இயற்கையான தடுமாற்றங்களை விரசம் இல்லாமல் விற்க தெரிந்தவர். “ரெட்டைவால் குருவி” போன்ற பல எடுத்துகாட்டுகள்.  இந்த சமுகம் ஒத்துகொள்ள மறுத்திருந்தால் இந்த கலைஞனை நாம் இழந்திருப்போம்.. அதே தடுமாற்றங்கள் தனக்கு இருப்பதையும் மறைக்க தெரியாதவர்.
மறுபடியம் படத்தில் “ஆசை அதிகம் வெச்சு” பாடலின் முடிவில் ஒரு வசனம். ஒரு இயக்குநரை பார்த்து தயாரிப்பாளர் கூறுவதுபோல். “இதில் நீ அந்த ஹீரோயின்மேல் வைத்திருக்கும் ஆசைதான் வெளிப்படுகிறது.. உன் இயக்குனர் திறமையை காட்டிலும்” என்று.  பின்னாளில்தான் புரிந்தது அது அவருடைய சொந்த அனுபவமாக இருக்கும் என்று.
இடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது பத்திரிக்கையில் அவரை பார்த்துக்கொள்வதாக ஒரு நடிகை கொடுத்த பேட்டி. ஏனோ தெரியவில்லை, அதில் எந்த அருவருப்பும் ஏற்படவில்லை. அவர் அவராக வாழ்ந்த காரணத்தினால்...
“வீடு”, “இராமன் அப்துல்லா” என்று சொல்லிகொண்டே போகலாம்.  ஒவ்வொரு படைப்பும் ஒரு வரலாற்று பொக்கிஷம். ஒரு சாமான்யனின் வாழ்க்கையை மிக துல்லியமாக சொல்ல தெரிந்த ஒரு மகாகலைஞன்.
“ஜூலி கணபதி” என்ற படத்தை எடுக்க வேறெந்த இயக்குனருக்கும் துணிவிருக்குமா என்று இன்றுவரை என்னை வியக்கவைத்த ஒருவர்.
அவருடைய பட்டறை மாணவராகிய சுகா அவர் மறைவிற்கு பின்னால் தன் பதிவில், அவர் இல்லையென்றாலும் அவர் படைப்புகள் வாழ்ந்துகொண்டிருக்கும் என்ற சம்பிரதாய அஞ்சலிக்கு பதிலளித்து “யாருக்கு வேண்டும் அவர் படைப்பு? எங்களுக்கு எங்கள் வாத்யார்தான் வேண்டும்” என்றார்.  என்ன ஒரு சுயநலம்?  என்னைப்போல் ரசிகனை நினைத்து “எங்களுக்கு படைப்பாளிதான் வேண்டும்” என்றல்லவா சொல்லிருக்க வேண்டும்?
பல படைப்புகள் அவருக்கு விருதுகளை தந்தபோதும் வசூலிலும் வெற்றியை குவித்தது என்பதே ஒரு கலைஞனுக்கு பெரிய சாதனையல்லவா !!!! இந்த இரண்டையும் ஒரே கலவையாக தரக்கூடிய இயக்குனர்கள் இனி இல்லை என்று சொன்னால் மிகையாகாது..
இருபத்தி இரண்டு படைப்புகள்தான் என்றாலும் இருநூறுக்குமேல் இருப்பதுபோல் ஒரு தோற்றம்.. இதுவே ஒரு கலைஞனின் வெற்றியல்லவா  !!!!
தலைமுறைகள் அவருடைய கடைசி படைப்பாக இருக்கலாம். அனால் பல தலைமுறைகளை தாண்டி அவர் படைப்புகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை..
அதே “கனவு காணும்” பாடலில் வரும் “பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி இருக்கின்றதென்பது மெய்தானே” என்ற வரிகளை மனம் ஏற்றுகொள்ள மறுக்கிறது.
“எங்களுக்கு படைப்பாளிதான் வேண்டும்” !!!!

Saturday, 25 January 2020

எரித்துவிடுங்கள் என் சிதையை...!!!

எரித்துவிடுங்கள் என் சிதையை...
என் உயிர் பிரிந்த இரண்டு மணிகளில்,
வீட்டில் உள்ளவர்க்கு சலிப்பு ஏற்படுமுன்,
விருப்பமுள்ளவர்கள் ஓடோடி வந்ததும்,
விருப்பமில்லாதோர் தவிர்க்க காரணம் தேடுமுன்,
எரித்துவிடுங்கள் என் சிதையை...

எரித்துவிடுங்கள் என் சிதையை...
துக்கம் அனுசரிப்போர் பசியாற போகுமுன்,
காத்திருத்தலுக்கு மாண்டவரை கரித்து கொட்டுமுன்,
துக்கம் மறந்து பெண்டீர் சுற்றத்தை சாடுமுன்,
எழவு வீடென்றும் பாராமல் அழகு குறிப்பை பகிருமுன்
எரித்துவிடுங்கள் என் சிதையை...

எரித்துவிடுங்கள் என் சிதையை...
என் பிணத்தின் அருகில் அமர்ந்து
அலைபேசியை கொண்டு முகநூலில் அரசியல் பேச்சையும்,
வடிவேலுவின் மீம்ஸையும் ரஜினியின் அரசியலையும்,
ரசித்து பக்கத்தில் பகிர்ந்து கொக்கரிக்குமுன்,
எரித்துவிடுங்கள் என் சிதையை...

எரித்துவிடுங்கள் என் சிதையை...
முகூர்த்தம் முடிந்ததுபோல் பழச்சாறை பருகுமுன்,
அலுவலக அரசியல் சூடு பிடிக்குமுன்,
பசியின் காரணத்தால் பிணத்தை சாடுமுன்,
அன்பிலார் வந்து செயற்கையாக சிலாகிக்குமுன்,
எரித்துவிடுங்கள் என் சிதையை...

எரித்துவிடுங்கள் என் சிதையை...
கொள்ளி போடுபவன் மறத்தும் மறந்தும்
எள்ளி நகையாடி அன்பை துறக்குமுன்
எரித்துவிடுங்கள் என் சிதையை...!!!