“மச்சி ஒன்னால மட்டும்தான் இதல்லாம் முடியம்”
“வந்துட்டாண்டா ஆர்ட் டைரக்டர்... படம் வேற
ரிலீஸ் ஆகிருக்கு”
இதல்லாம் நான் எண்பதுகளின் முடிவிலும்
தொண்ணுறுகளிலும் கேட்ட ஏச்சுகளும் பேச்சுகளும்..... நான் செய்த ஒரே தவறு பாலுவின்
பரம ரசிகனாக இருந்தது மட்டுமே...
கலாய்பது என்பது வார்த்தையாக அந்த காலங்களில் இல்லாவிடினும்
வழக்கமாக என்றுமே இருந்திருகிறது. அதுவும் டீன்ஏஜ் பருவத்தில், உயர்நிலை மற்றும்
கல்லூரி மாணவனாக இருக்கையில் கேட்கவே வேண்டாம்..
“மாங்குயிலே பூங்குயிலே” என்றும் “போவோமா
ஊர்கோலம்” என்றும் பாடி திரிய வேண்டிய வயதில் பாலுவின் திரைப்படங்களை பார்ப்பது
ஒரு தண்டனையாக கருதிய என் நண்பர்கள் மத்தியில் நான் ஒரு விசித்திர பிறவியாக பார்க்கப்பட்டேன்..
நாங்கள் அனைவரும் ஒன்றாக திரைப்படங்களை பார்ப்பது என்று ஒரு தர்மத்தை மட்டும்
வைத்திருந்தோம். அவர்களை பாலுவின் திரைப்படங்களுக்கு இழுக்க எனக்கு உதவியது
இசைஞானியின் இசை என்ற ஒரு தூண்டில் மட்டுமே..
இனி பாலு...
சில மரணங்கள் நமக்கு வெறும் செய்திதான். வேறு
சில அனுதாபத்தை எற்படுதகூடியவை. சில நம்மை
கதறவைப்பவை. அந்த வகையில் இவர் மறைவு என்
கண்களை பனிக்கவைத்தது என்பதில் சந்தேகமில்லை.
“கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும்
கோலங்கள்” எங்கிருந்தோ இந்த வரிகள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த
பாடல் அவர் இயக்கிய நீங்கள் கேட்டவை படத்திலிருந்து நான் எப்பொழுதும் கேட்பது,
கேட்டுகொண்டிருப்பது..
அழியாத கோலங்கள் தன்னுடைய இரண்டாவது
படைப்பாயினும் அதையே தன் சுயசரிதை என்று கூறிய ஒரு இயக்குனர்.. தன் வாழ்க்கை
தொடங்கும்போதே சுயசரிதை எழுத தெரிந்தவர்...
ஒரு மனிதனின் இயற்கையான தடுமாற்றங்களை விரசம்
இல்லாமல் விற்க தெரிந்தவர். “ரெட்டைவால் குருவி” போன்ற பல எடுத்துகாட்டுகள். இந்த சமுகம் ஒத்துகொள்ள மறுத்திருந்தால் இந்த
கலைஞனை நாம் இழந்திருப்போம்.. அதே தடுமாற்றங்கள் தனக்கு இருப்பதையும் மறைக்க
தெரியாதவர்.
மறுபடியம் படத்தில் “ஆசை அதிகம் வெச்சு” பாடலின்
முடிவில் ஒரு வசனம். ஒரு இயக்குநரை பார்த்து தயாரிப்பாளர் கூறுவதுபோல். “இதில் நீ
அந்த ஹீரோயின்மேல் வைத்திருக்கும் ஆசைதான் வெளிப்படுகிறது.. உன் இயக்குனர் திறமையை
காட்டிலும்” என்று. பின்னாளில்தான்
புரிந்தது அது அவருடைய சொந்த அனுபவமாக இருக்கும் என்று.
இடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது
பத்திரிக்கையில் அவரை பார்த்துக்கொள்வதாக ஒரு நடிகை கொடுத்த பேட்டி. ஏனோ
தெரியவில்லை, அதில் எந்த அருவருப்பும் ஏற்படவில்லை. அவர் அவராக வாழ்ந்த
காரணத்தினால்...
“வீடு”, “இராமன் அப்துல்லா” என்று சொல்லிகொண்டே
போகலாம். ஒவ்வொரு படைப்பும் ஒரு வரலாற்று
பொக்கிஷம். ஒரு சாமான்யனின் வாழ்க்கையை மிக துல்லியமாக சொல்ல தெரிந்த ஒரு
மகாகலைஞன்.
“ஜூலி கணபதி” என்ற படத்தை எடுக்க வேறெந்த
இயக்குனருக்கும் துணிவிருக்குமா என்று இன்றுவரை என்னை வியக்கவைத்த ஒருவர்.
அவருடைய பட்டறை மாணவராகிய சுகா அவர் மறைவிற்கு
பின்னால் தன் பதிவில், அவர் இல்லையென்றாலும் அவர் படைப்புகள் வாழ்ந்துகொண்டிருக்கும்
என்ற சம்பிரதாய அஞ்சலிக்கு பதிலளித்து “யாருக்கு வேண்டும் அவர் படைப்பு?
எங்களுக்கு எங்கள் வாத்யார்தான் வேண்டும்” என்றார். என்ன ஒரு சுயநலம்? என்னைப்போல் ரசிகனை நினைத்து “எங்களுக்கு
படைப்பாளிதான் வேண்டும்” என்றல்லவா சொல்லிருக்க வேண்டும்?
பல படைப்புகள் அவருக்கு விருதுகளை தந்தபோதும்
வசூலிலும் வெற்றியை குவித்தது என்பதே ஒரு கலைஞனுக்கு பெரிய சாதனையல்லவா !!!! இந்த
இரண்டையும் ஒரே கலவையாக தரக்கூடிய இயக்குனர்கள் இனி இல்லை என்று சொன்னால்
மிகையாகாது..
இருபத்தி இரண்டு படைப்புகள்தான் என்றாலும்
இருநூறுக்குமேல் இருப்பதுபோல் ஒரு தோற்றம்.. இதுவே ஒரு கலைஞனின் வெற்றியல்லவா !!!!
தலைமுறைகள் அவருடைய கடைசி படைப்பாக இருக்கலாம்.
அனால் பல தலைமுறைகளை தாண்டி அவர் படைப்புகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை..
அதே “கனவு காணும்” பாடலில் வரும் “பிறக்கின்ற
போதே இறக்கின்ற தேதி இருக்கின்றதென்பது மெய்தானே” என்ற வரிகளை மனம் ஏற்றுகொள்ள
மறுக்கிறது.
“எங்களுக்கு படைப்பாளிதான் வேண்டும்” !!!!
Good tribute to a great creator!
ReplyDelete