Thursday, 22 January 2026
அஞ்சலி
Wednesday, 22 November 2023
திருச்சியும் திரையிசையும்
நீ.....
நீ....
மூன்றில் குழந்தையாய்....
இருபதில் தோழியாய்...
முப்பதில் மௌனியாய்....
நாற்பதில் நறுமுகையாய்...
இனி
ஐம்பதையும் அறுபதையும்
ஆவலுடன் எதிர்நோக்கி நான்...
மீண்டும் மீண்டும் வா...!!!
அம்மா
என்....
நான்காம் வயதில்
மரத்தை சுற்றி ஓடிய கால்கள்
களைத்து உணவை நாடி வருகையில்
ஊட்டி வளர்த்து உள்ளம் மகிழ்ந்தாய்...
பதினான்காம் வயதில்
அறியாத ஊரில் அனாதையாய் எண்ணி
நாள்தோறும் நான் கலங்க
வாழ்வை நெறிபடுத்தினாய், வலிபாராமல்...
இருபத்திநான்கில்
இந்த இல்லத்தின் புதிய வரவானவளை
வாயாற வாழ்த்தி உளமாற வரவேற்று
உன் அன்பை பகிர்ந்தாய் பதட்டமில்லாமல்...
முப்பத்து நான்கில்
முத்து முத்தாய் இரண்டு மழலைகளை
முத்தாய்ப்பு செய்து உச்சி முகர்ந்தாய்
பசி தூக்கம் அறிந்து முகம்வாட விடாமல்....
நாற்பதை தொடும் முன்பே
நாதியற்று போனதுபோல்
உன் மரணம் என்னை பீதியேற்ற
உணர்ந்தேன் நீயில்லா வெறுமையை....
நான்காண்டுகள் உருண்டனவே
நாள்தோறும் உன் நினைவில்
எனையாட்கொண்ட வெறுமையை
வெல்லும் முயற்சி தோல்வியில்
வெற்றிடத்தை நிரப்பிவைக்க
அன்னையைப்போல் யாருளர்...!!!
இசைஞானி....
அரும்புகளாய் தவழ்ந்தபோது
அவ்வையின் ஆத்திச்சூடி
அரும்புமீசை காலத்தில்
உன் இசையே என் உயிர்நாடி
"உன்னோடு ஐவரானோம்"
என்றான் இராமன் தன் காலத்தில்..
நாங்களோ உன்னோடு
ஐவராக்கினோம்.... ஆம்..
மாதா..
பிதா..
குரு..
தெய்வம்...
ஐந்தாவதாக...இசைஞானி.....!!!!
பாலு....
Saturday, 25 January 2020
எரித்துவிடுங்கள் என் சிதையை...!!!
Saturday, 27 July 2019
நரியே நரியே
நரியே நரியே...
ஒழுங்கீனம் ஒழுக்கமென்றும்,
போலியான பாசாங்குக்கும்,
வேடதாரி தலைவனென்று,
கையாலாகாதவன் தொண்டுராக
பின் செல்லும் காலமிது.
நேர்மை தனை குழிதோண்டி
புதைத்துவிட்டு புத்தனைப்போல்
யாருக்கும் உண்மையின்றி
சமூகத்தில் வலம் வந்து,
வாழ்வதனில் உன் கடமை
ஆற்றகூட வழியின்றி,
செய்திட்ட பாவத்தின்
பயனாக படுகின்றாய்.
இன்னும் ஏன் உனக்கு
மற்றவரின் பொல்லாப்பு,
உன் பிரித்தாளும் சூழ்ச்சியினை
புரியாத பித்தர்களா,
புரித்தும் நன்கறிந்தும்
உனை ஏய்க்கும் சகுனிகளா.
நீ அவனை மூடனென்றும்
அவன் உன்னை மூடனென்றும்,
மாறி மாறி ஏய்க்கின்றீர்
மனதுக்குள் மகிழ்கின்றீர்.
காலம் உம்மை வெளிகாட்டும்
வெட்கங்கெட்ட மானிடரே..
மற்றவனை மகிழ்விக்க
நீ செய்யும் சலசலப்பை,
கண்டு அஞ்சி சலனமாக
உன்னைப்போல் நான் நரியில்லை.
ஏமாற்றும் உன் போக்கை
என்றோ உணர்ந்த சிங்கமடா,
நினைவாற்றலில் என்றுமே
உந்து மத களிறுயடா
மூடனென எனை நினைத்தால்
காலன் உனை கவர்வதற்குள்,
காலம் உனக்கு பதிலளிக்கும்
செய்த பாவம் உனை மிரட்டும்.
நான் மற்றவரை முன்னேற்றி
முடிந்தவரை மகிழ்வித்து,
மகிழ்ச்சியுறும் மனம்கொண்ட
மாசற்ற மனிதனடா...!!!
Monday, 12 November 2018
தாமிரபரணி மஹாபுஷ்கரம்...
தாமிரபரணி மஹாபுஷ்கரம்...!!!
வான்வழி, தரைவழி, தொடர் ஊர்தி என பல திட்டங்கள் தீட்டி செயலாற்ற இயலாமல், இறுதியாக சொந்த சிற்றுந்திலே செல்வது என முடிவாயிற்று. கூடவே என் தர்ம பத்தினி...
பல உரையாடல்களில் ஒன்று தெளிவானது. ஒருமித்த குரலில் "திருநெல்வேலிக்கு வரவேண்டாம்"
சென்று வர 1300 கி.மீ ஆகும் என்பதால் 3 நாள் பயணமாக திட்டமிட்டேன். 19/10/18 அன்று ஒரு திருமண விழாவில் தலையை காட்டிவிட்டு சுமார் காலை 10 மணிக்கு துவங்கினோம். மாலை 5 மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் திருக்கோவிலில். தாயார் ஒரு குழந்தைக்கு சொன்ன கதைகளையே மீண்டும் சொல்வதும், அதையும் அந்த குழந்தை புதிதுபோல் கேட்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு பல முறை சென்றிருந்தாலும் கேட்டிருந்தாலும், அறிந்த வரலாற்றால் நம் கால்கள் கோவிலின் மிக முக்கியமான இடங்களை நோக்கி தாமாகவே சென்றாலும், மீண்டும் மீண்டும் அந்த ஸ்தலத்தை பற்றி அர்ச்சகர் கூறும்போது புதிதாக கேட்பதுபோல் நான் அனுபவிப்பது, தாயாருக்கும் எனக்குமான ஒரு தாய் சேய் உறவை புதுப்பிப்பதாகவே உணர்ந்தேன். இந்த அனுபவமே சரணாகதி அனுபவத்திற்கு இணையானது. அந்த அனுபவத்தோடு இராஜபாளையம் சென்று ஓய்வெடுத்தோம்.
திட்டமிட்டபடி மறுநாள் 20/10/18 காலை 5 மணிக்கு எழுந்து 6 மணிக்கு புறப்பட்டோம். தென்காசி வழியாக பாபநாசம் செல்ல திட்டம். தென்காசி வரை சென்ற நாங்கள் ஒரு புது ஸ்தலத்திற்கு எங்களை அறிமுக படுத்தியதை நினைவு கூர்ந்தோம். வண்டியை நிறுத்திவிட்டு கூகுள் துணையை நாடினோம். அது பாபநாசம் செல்லும் வழியில்லாமல் திருநெல்வேலி தடத்தில் இருந்தது. போக தீர்மானித்தோம்.
கூகுள் துணையுடன் செல்ல வேண்டிய கீழப்பாவூர் வந்தடைந்தோம். ஆஹா. என்னே ஒரு அனுபவம்..!!! 16 புஜங்களிலும் ஆயுதங்களை கொண்ட ந்ருஸிம்மன், நம் துயரங்கள் அனைத்தையும் தகற்க...!!! அக்கோவிலேயே பத்மாவதி ஸமேத ஸ்ரீனிவாசப் பெருமாள். 🙏🙏🙏
தடம் மாறி வந்தாலும் இறைவனின் சங்கல்பம் இருப்பின் வரவேண்டிய இடம் வந்து திடமான அனுபவத்தையே பெறுவோம் என்பது மீண்டும் ஊர்ஜிதமானது.
மீண்டூம் கூகுள்.. பாபநாசத்திற்கு பதிலாக அருகில் உள்ள புஷ்கரத்தின் தீர்த்தமாடும் இடத்தை தேடினோம். முக்கூடலை பரிந்துரைத்தது. அங்கேயே சென்றோம். வந்த நோக்கத்தை நிறைவேற்றினோம்.
திருநெல்வேலி சென்று உணவருந்தி திருச்சி செல்வதாக திட்டம். ஊருக்குள் செல்ல இயலாத அளவிற்கு வாகன நெரிசல். மீண்டும் கூகுள். மதுரை செல்லும் நெடுஞ்சாலை பரிந்திரைக்க செய்து வெளியேறினோம்.
உணவகத்தில் மதியம் 1 மணிக்கு திடீர் ஞானோதயம். துலா ஸ்நானத்தை 5.30 மணிக்குள் முடித்துக்கொண்டு அரங்கனை இன்றே சேவித்தால்?? மனதார அரங்கனை ப்ரார்த்தித்து புறப்பட்டோம். 5.15 மணிக்கு அம்மா மண்டபம்.. துலா ஸ்நானம் முடித்து அரங்கன் தரிசனம். ஆஹா... தாயாரும், பெருமாளும் வார்த்தையால் வர்ணிக்க இயலாத கருணையை பொழிந்து சேவை சாதித்தனர். முடித்து வெளியேறுகையில் மணி இரவு 9.00. நேராக விடுதி...
திருச்சி....!!! என் வாழ்வின் திசையை திருப்பிவிட்டு பல அனுபவங்களை தந்த நகரம். 13 வயதில் நான் என் தாய் தந்தையை விட்டி விலகி, இரண்டு ஆண்டுகள் என் மாமாவின் குடும்பத்தில் ஒருவனாய் ஒருங்கிணைத்த ஊர். அந்த இரண்டாண்டுகளில் எனக்கேற்பட்ட அனுபவங்களும், பாடங்களும், அதன் காரணமாக என் மனதில் ஏற்பட்ட தழும்புகளும்...!!! என் வாழ்நாளில் வரக்கூடிய எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள கிடைத்த கையேடு...!!! மீண்டும் 15 ம் வயதில் என் பெற்றோரின் அரவணைப்பில் வந்தாலும், ஆழ்மனதில் அந்த அனுபவங்களே என்னை வழிநடத்துகின்றன.
35 ஆண்டுகளுக்கு முன்பான என் அனுபவங்களை மூன்று மணிநேரத்தில் பயணித்தேன். நான் ஐக்கியமான/ என்னுள் ஐக்கியமான பல இடங்கள்... வாழ்ந்த இல்லம், படித்த பள்ளி, விளையாட்டு மைதானம் ஆகியவற்றிக்கு நேரில் சென்றும், மற்றும் திருச்சிக்கே உரித்தான மலைகொட்டை, தெப்பகுளம், புனித ஜோசப், ஹோலி க்ராஸ் கான்வென்ட், சத்திரம் பேருந்து நிலையம், மாரீஸ் திரையரங்கு, என் மாமாவின் அலுவலகம் என நகர்வலம் வந்து 35 ஆண்டுகளுக்கு முன்பான அனுபவங்களை நேரில் வர்ணித்து... பல இடங்களில் மகிழ்ச்சியுடன் சில இடங்களில் கண்களை முட்டும் நீர்துளிகளுடனும்...!!!
பிறகு உறையூர்... கமலவல்லி நாச்சியார் கருணை சொல்லி மாளாது. நான் வாழ்ந்த தில்லை நகரிலிருந்து நடந்து போகும் தூரம் என்பதால் ஸ்ரீரங்கத்தைவிட அதிகமாக சென்ற உறையூர்... அந்த ஈர்ப்பு... இன்றும் திருச்சி செல்லும் சமயங்களில் எல்லாம் உறையூர் என் பயண திட்டத்தில் இடம்பெறும். தாயாரும் இன்றளவும் என்னை அரவணைப்பாள்...🙏🙏🙏
மூன்றில் இரண்டு நாட்கள் திட்டமிடாதவையேயாகினும் இறைவன் திட்டமிட்டு வழிநடத்தியதை உணர்வு பூர்வமாம அறிந்து ஏற்று, ஆனந்தமா அனுபவமா என தீர்மானிக்க முடியாத நினைவுகளுடன் திருச்சியிலிருந்து புறப்பட்டோம்.
உளுந்தூர்பேட்டையிலிருந்து பலத்த மழை. பயண வேகம் குறைந்தது. வண்டியை உருட்டிக்கொண்டு வந்த எனக்கு அந்த பலகை கண்ணில் பட்டது. "பரிக்கல்"...
மகிழ்ச்சி பொங்க கிளை சாலையில் வண்டியை செலுத்தினேன். சந்நிதி வாயிலில் கூட்டம். காணும்போது எப்படியும் ஒரு மணி நேரம் பிடிக்கும் என எண்ணி மெதுவாக நடந்தோம். அருகில் சென்றப பிறகு உணர்ந்தோம் அது சேவை முடிந்து மழைக்காக காத்திருக்கும் கூட்டம் என. சந்நிதியில் ந்ருஸிம்மனின் கருணை 5 நிமிடத்தில் சேவை தந்து எங்களை அனுப்பி வைத்தார்.
திண்டிவனம் வரை பெய்த மழையில் சற்று எச்சரிக்கையாகவும் பிறகு வழக்கம்போலும் ஊர்தியை செலுத்தி சென்னை வந்தடைந்தோம்....!!!
விச்சு டாக்டர்
"தைரியமாக ஒரு Fanta வாங்கி சாப்பிடு. ஜுரம் இருப்பதை பற்றிய கவலை வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன்"
1970 களில் Fanta என்ற பானம் தடை செய்யப்பட்டு மீண்டும் 90 களில் திரும்பி நுழைந்த இடைபட்ட காலத்தில் "Gold spot". பானத்தின் பெயர் மாறுமேயன்றி, கொடுக்கப்பட்ட தைரியத்தில் எள்ளளவும் மாற்றமில்லை. பானம் வேண்டாம் என்றால் ஒரு ஆரஞ்சு குச்சி ஐஸ்....
இரண்டு தலைமுறைகளை தாண்டி "நான் பார்த்துக் கொள்கிறேன்" என்ற வாக்கு, ஒரு தெய்வ வாக்காகவே எங்களுக்கு தைரியத்தை தந்தது.
சொல்லத் தெரியாத குழந்தைகளாக இருந்த வயதில் என் மகள் ஒரு 50 மி.லி ஜலதோஷத்திற்கான மருந்தை மொத்தமாக அருந்தி அரை மயக்கமானபோதும், என் மகன் கொசுவர்த்தி மருந்து Good Nightயை உடைத்து அதை வாயில் வைத்திருப்பானோ என்ற ஐயம் ஏற்பட்டபோதும், அவரின் தைரியமூட்டும் அணுகுமுறையே தனித்துவமானது.
சாதாரண ஜுரம், ஜலதோஷத்திற்கு கூட அவரிடம் காண்பித்தால் மட்டுமே எங்களுக்கு மன அமைதி ஏற்படும். அங்கு எவ்வளவு கூட்டம் இருப்பினும்...
நான் பிறந்தது முதல் இன்று வரை குழந்தைகள் உடல்நலம் எனில் அவரை தவிர வேறு ஒருவரிடமும் செல்லாத போக்கையே கடைபிடுத்து வந்துள்ளோம்.
Dr J Viswanath என்கிற குழந்தை நல மருத்துவரை (அல்ல நிபுணரை) "விச்சு" என்று மிக உரிமையோடு அழைக்கும் பேறு பெற்ற குடும்பம் எங்களுடையது. அவரின் இளமைப் பருவம் முதல் 45 ஆண்டுகளுக்கு மேலாக பக்கத்து வீட்டாராகவும், கடந்த 32 ஆண்டுகளாக ஒரு மருத்துவராகவும், அவரின் குழந்தை வளர்ப்பிற்கான நூலை பதிப்பிக்கும் உரிமை வழங்கியவராகவும், நல்ல மனிதராகவும், மிக அருமையான குடும்ப நண்பராகவும் விளங்கியவர்.
அவரிடம் Appointment பெற காலை 5 மணிக்கு தொலைபேசியில் என் தந்தை அழைக்கும் போதும், பகல் பொழுதில் சந்திக்கும் போதும், சில மாலை நேரங்களில் சந்தேகங்கள் கேட்பதற்கு அழைக்கும் பொழுதும் ஒரே மாதிரியான உற்சாகம் நாள் முழுவதும் ஒருவருக்கு இருப்பது பல நேரங்களில் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
அவரின் இளமைக் கால நினைவுகளில் எங்கள் இல்லத்திற்கு வந்து அவர் விரும்பி உண்ட ஐயங்கார் வீட்டு புளியோதரையும், மோர் குழம்பும், எங்கள் வீட்டு பெரியோர்கள் மகிழ்ச்சியோடு நினைவுகூறுவதை என் வாழ்நாளில் பலமுறை கூறகேட்டிருக்கிறேன்.
என் குழந்தைகள் மட்டுமின்றி எங்கள் நண்பர்களின் குழந்தைகள் பல, சாதாரண நிலை முதல் மிக அவசரமான நிலை வரை, எங்கள் மூலம் அவரிடம் சென்று காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பதில் எங்களுக்கு ஒரு பெருமிதமே.
அவர் நினைவுத்திறன் மிக பிரம்மிப்பானது. ஒவ்வொரு குடும்பத்தையும் ஒரு பெயர் கொண்டு நினைவில் ஏற்றி, அந்த பெயர் கொண்டே அவர்களை உள்ளே வரவேற்கும் முறை அலாதியானது.
அவர் மகனும் நானும் சமகாலத்தில் வளர்ந்தவர்கள் என்பதால், அவரை பற்றிய செய்திகளை அவ்வப்போது பகிர்வார்.
கடைசியாக ஒரு மாதத்திற்கு முன் எங்கள் விட்டிற்கருகில் வர நேர்ந்தபோது, அவரின் உடல் நலக்குறைவின் காரணமாக எனது தந்தையை வெளியிலிருந்தே அழைத்து குசலம் விசாரித்து என் தந்தையுடனும், மனைவியுடனும் தன் கைபேசியில் சுயபடம் எடுத்து சென்றார்.
எங்கள் குடும்பத்தின் இனிவரும் தலைமுறையின் நலத்தினை பேணிக்காக்க அவரில்லை என்பதை ஏனோ என் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.
தொலைபேசியை எடுத்தவுடன் "Viswanath"எனும் அந்த உற்சாக குரலும்,"வாங்க சேச்சு" (என் தந்தை சேஷாத்திரியின் சுருக்குபெயர்) என்று வரவேற்க்கு குரலும் இனி வெறும் நினைவுகளே! !!!
Dr J Viswanath (எ) Dr JV (எ) விச்சு டாக்டர் ....ஒரு சகாப்தம்...!!! Ohm Shanthi
Wednesday, 17 August 2016
தீர்த்த கரையினிலே....
நதியாக ஓடிய நீ இடையில்
தடம் மாறி வரண்டு போனாய்
நம்பிக்கை இழந்த நிலையில் மீண்டும்
மடைதிறந்த வெள்ளமாய் வந்தாய்
உறவுகளை ஒதுக்கிய நீ
உள்ளக் கதவுகளை மூடவில்லை
பூக்க மறுத்த பூச்செடியே உனக்கு
பூச்சி மருந்து என் வார்த்தைளோ?
'கிளி' யொன்று தன்னைத்தானே
சிறைகொண்ட வினோதம் நீ
காலம் கடந்த முயற்சியாயினும்
பரோலில் வெளிவந்த அன்னம் நீ
மூன்றாம் பிறையாய் வந்தவளே நீ பௌர்ணமியாகும் வரை அடைகாப்பேன்,
ஒரு நாளும் உனை மறவாஉயர்வான நிலை கேட்பேன்.
சொர்க்கத்தில் நிச்சயித்ததை நரகமென நீ துறந்தாய்,
முன் ஜென்ம மிச்சத்தை நீ வாழ யத்தனித்தாய்.
சிறைவாசம் நீ துறக்க எங்கும் பூவாசம் மயக்குதடி,
என்னருகில் நீ இருந்தால்என் சுவாசம் நிலைக்குமடி.
உன் முகத்தழகை முன்னிறுத்தி முடிவெடுக்கும் மூடனல்ல,
அகத்தழகு முகத்தழகாய் மிளிரும் வரை ஓய்வில்லை.
தயங்காதே செல்லமே உன்னைத் தனிமையில் விடமாட்டேன்,
உன் தேவை நான் அறிந்து உயிர் கொடுத்துக் காத்து நிற்பேன்...!!!
Sunday, 14 August 2016
நாமுத்துகுமார்
காலச்சக்கரம் சுழன்றுமுடிக்கும் முன்
காலன் எழுதினான் இரங்கல் கவிதையை
ஜவுளிக்குதான் என நினைத்தேன்
ஆடிக் கழிவு ஆயுளுக்கும் உண்டோ?
Sunday, 6 September 2015
பழகிவிடும்....
பிரிவு, சுகம், துக்கம், மகிழ்ச்சி, இகழ்ச்சி, துரோகம், அவமரியாதை, ஏளனம், சூழ்ச்சி, உபச்சாரம், மரணம்....
அனைத்தும் அனைவர்க்கும் பழகிவிடும்...
குறை கண்டு உளம் குமுறாது
நிறைகண்டு மகிழ பழகினோம்..
நிதானத்தை இழந்தபோதும்
நிகழ்வுகளை கண்டு அஞ்சினோம்..
நமக்காக வாழாது
பிறர்க்காக நடித்தோம்...
நடப்பவற்றை உணராது
நடைபிணங்களாய் வலம் வந்தோம்....
மறத்துப்போன மானிடராயிற்றே...!!!
பாதிக்காதது மறந்துபோகும்
மற்றவை நம்மோடு மடிந்துபோகும்....!!!!!
Sunday, 30 August 2015
அப்துல் கலாம்....
கலாம்..
முலாம் தேவைப்படாத கலாம்..
உன்னால் எங்களுக்கு பெருமை...
நீயின்றி இனி வெறுமை..
இளைய சமுதாயத்தை கவர்ந்தாய்..
இளைஞர் மத்தியில் மடிந்தாய்..
உன்னைப் இழந்து வாடும் தேசம்..
என்றென்றும் மாறாது எங்கள் நேசம்..